Make your own free website on Tripod.comசிவமயம்

யோகசுவாமிகளின் மகாவாக்கியப் பொருள்

சைவநன்மணி நா. செல்லப்பா

 

3. ஒரு பொல்லாப்பும் இல்லை

இது யோகசுவாமிகள் அருளிய மூன்றாவது மகாவாக்கியம் ஆகும். மற்ற மகாவாக்கியங்களைப் போல இதுவும் அதிகாரத்துடன் கூடிய கட்டளையாக அமையவில்லை. குறிப்பிட்ட சாதனை எதுவும் செய்யும்படி கூட இது பணிக்கவில்லை. மேலெழுந்தவாரியாக இதைப் படிக்கும்போது இதிற் பொதிந்துள்ள மறைபொருள் யாதென்பதைச் சரிவரப் புரிந்து கொள்வது கடினமாக உள்ளது. இது ஒரு மறைபொருள் நிறைந்த மறைஞான வாக்கியமாகும். வற்றாத ஊற்று. இறைக்க இறைக்கக் குன்றாது அருள் சுரப்பதாகும். இதன் மறைபொருளை நாம் கிரகித்தே உணரவேண்டியுள்ளது. எமது கிரகிக்கும் ஆற்றலைப் பொறுத்தே இதன் உண்மை விளக்கம் விழுப்பம் அடையும். அதற்கேற்பவே இதிலிருந்து என்ன சாதனா முறைகளைப் பெறமுடியும்? என்பதும் தெளிவாகும். யோகசுவாமிகள் நல்லூர்க் கந்தன் முன்னிலையில் செல்லப்பாச் சுவாமிகளிடம் மகாவாக்கிய உபதேசம் பெற்றார். பின்பு தனிமையில் துரியாதீத மௌனநிலையில் கதிர்காமக் கந்தன் முன்னிலையில் மெய்ஞ்ஞான விளக்கம் பெற்றார்.

அவர் மெய்ஞ்ஞான விளக்கம் பெற்ற முறையிலேதான் நாமும் அதைப் பெறவேண்டியுள்ளது. மகாவாக்கியங்களை நெட்டுருச் செய்து ஓயாது ஓதுவதனால் எவராலும் மெய்ஞ்ஞான விளக்கம் பெறுதல் முடியாது. முருகன் அருள் கொண்டு விழிப்புணர்வுடனும் அவதான ஆற்றலுடனும் அவற்றை நடுவு நிலையில் நின்று சரிவர விசாரனை செய்தலே மறைஞான உபதேசத்தின் மெய்பொருள் முழுமையாகப் புலப்படும். எனவே நாம் முருகனிடம் பூரணமான சரணாகதி அடைந்து "ஒரு பொல்லாப்பும் இல்லை" என்னும் மகாவாக்கியத்தை ஆய்ந்து தெளிவோம்.

இதற்கு எழுத்தாளர் 1929ஆம் ஆண்டிலிருந்து யோகசுவாமிகளுடன் கொண்டு நீடித்து வந்த நல்லுறவு பேருதவியாக இருந்து வந்தது. அந்த உறவில் 1941ஆம் ஆண்டு ஓர் உளவியல் மாற்றம் ஏற்பட்டது. அதற்குக் காரணம், திருக்குறள் ஆய்வுமூலம் நான் பெற்ற சார்பு கெடும் இயல்பும் மெய்யுணர்தலுமாகும். நல்லுறவுக்கு அடிப்படைத் தேவை புணர்ச்சிடன் பழகுதலும், மன உணர்ச்சியும், எதையும் எதிர்ப்பார்த்தலும் அல்ல என்பதைத் தெளியலானேன். அதனால் புணர்ச்சிப் பழகுதலும் உணர்ச்சி பசப்படுதலும் ஆளாகாது மெய்யுணர்தல் மலர்தலிலேயே முக்கிய கவனம் செலுத்தலானேன். அதன் பேறாக எனக்கும் யோகசுவாமிகளுக்கும் ஏற்பட்ட வெளியுறவில் ஓர் அற்புதமான மாற்றம் உண்டாகியது. அது மனமாற்றமாகவும் ஆத்மீக உறவில் உயர்வும் கொடுத்தது. மன இந்திரிய உணர்ச்சி விருத்திக்குப் பதிலாக மெய்யுணர்தல் என் இதய தாமரையில் இருந்து மெல்ல மெல்ல மலரலாயிற்று. மன உணர்ச்சி நீங்கியது. தெய்வீகமான மெய்யுணர்தல் உதயமாகியது. உணர்சச்சிக்கும் உணர்வுக்கும் உள்ள வேறுபாட்டைத் தெள்ளத்தெளிய விளங்கலானேன்.

தனிப்பட்ட முறையில் யோகசுவாமிகள் எனக்குக் கூறிய ஆரூடம் நான் உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெறும்போதே சரி வந்தது. அவர் கூறிய தீர்க்க தரிசன வார்த்தைகள் "நீ அரச உத்தியோக பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பின்புதான் ஆத்மீகத் துறையில் முழுமையாக ஈடுபடுவாய். அதன் பிற்பாடுதான் உனக்கு இந்த நான்கு மகாவாக்கியங்களின் முழுமையான உண்மை விளக்கம் ஏற்படும். ஒரு பொல்லாப்பும் இல்லாமல் வாழப் பழகி வா" என்பதாகும். இதை நான் தற்பெருமையாக எழுதவில்லை. சாதகர்களுக்கு இது ஒரு வழிகாட்டியாக இருத்தல் வேண்டும் எனப் பிரார்த்தித்து எழுதுகிறேன். சுவாமிகள் அருளியபடி நான் 1972ஆம் ஆண்டு உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெற்ற பின்புதான் ஒரு பொல்லாப்பும் இல்லாது பூரணமாக வாழ்வது எப்படி? என்பதைப் பற்றி ஆழமாக அருள்பெற்றுத் தியான விசாரணை செய்து வரலானேன். அதன் பேறாக 23 வருட சாதனையின் பின்பு "ஒரு பொல்லாப்பும் இல்லை" எனும் சுவாமிகளின் மகாவாக்கிய விளக்கம் எழுதத் துணிந்தேன். இதை எழுதும் தகுதி எனக்கு உண்டா? என்பதை நான் அறியேன். யோகசுவாமிகள் காட்டிய ஆத்மீக நெறி என்னிடம் செயற்படுகிறது. திருமுருகன் அருள் பொழிகிறது,. அவ்வளவுதான். "ஒரு பொல்லாப்பும் இல்லை" என்பதற்கு ஆய்வுரை வெளி வருகிறது.

"ஒரு பொல்லாப்பும் இல்லை" என்பதின் மனவாசக விளக்கம் பூரணமானதாக இருத்தல் அசாத்தியமாகும். அது அரைகுறையான படியால் பூரணமாகுதல் அரிது. பூரணமான உண்மை விளக்கம் பெறுவதற்கு எமது மனத்தில் முதலாவதாக ஒரு மாற்றம் ஏற்படுதல் மிகவும் அவசியமாகும். அந்த மாற்றம் ஏற்படாது எவ்வளவுதான் கற்கினும் கேட்பினும் யோகசுவாமிகளுடைய நற்சிந்தனைகள் உட்பட -- எவ்விதமான பிரயோசனமும் ஆத்மீகத்துறையில் உண்டாகப் போவதில்லை. உலகியற் துறையில் கற்றலும் கேட்டலும்

பயனளிக்கும் என்பதில்ல் சந்தேகம் இல்லை. அதனால் அது ஆத்மீகத் துறையிலும் போதிய பலன் அளிக்கும் என நம்பி நடத்தல் பேதமையாகும். எனவே நாம் மனதில் எத்தகைய மாற்றம் பெறுதல் வேண்டும்? என்பதை ஆய்ந்து தெளிவோம்.

சாதாரனமாக நாம் மனத்தை எவ்வகையில் உபயோகித்துக் கல்வி கேள்விகளை விருத்தி அடையச் செய்கிறோம் என்பதை நன்கு அவதானிப்போம். இங்ஙனம் அவதானிக்கும் போது அது ஓர் ஆயுத ஊடகமாக ஆத்மாவுக்கு உபயோகப்படுவதைக் காணமுடிகிறது. இங்ஙனம் ஆயுதமாகச் செயற்படும் மனதுக்கு மொழி ஆதாரமாக உள்ளது. மனதில் எழும் சிந்தனைகளும் உணர்ச்சிகளும் இயல்பாகவே இருமை வகையான எதிர்ப்புச் சக்திகளை உடையனவாக இருக்கின்றன. அவற்றுள் நல்லனவும் பொல்லாதனவும் ஒருங்கே அமைந்துள்ளதை நாம் கவனிக்கக் கூடியதாக உள்ளது. அவற்றுள் ஒன்றைவிட்டு மற்றதைப் பிரித்து எடுத்தல் இயலாத காரியமாகும். பொல்லாப்புடைய மனதுக்கு நல்லதைச் செய்யெனத் தூண்டுவது யார்? புறத்தூண்டல்களினால் மனத்தால் பொல்லாதனவற்றை விட்டு நல்லவற்றைத் தனியே செய்தல் சாத்தியமாகுமா? எனவே மனதுக்கு நன்மையை மட்டும் செய், தீமை ஏதும் செய்யாதே என உபதேசிப்பதில் யாது பிரயோசனம்? வீண் உபதேசம் மனதுக்குச் செய்வதை விட்டு எமது மனதில் ஏன் மாற்றம் ஏற்படவேண்டும்? அதை எப்படிச் செய்தல் வேண்டும்? அது எப்படியான மாற்றம்? என்பனவற்றைப் பற்றி இப்பொழுது விசாரனை செய்து தெளிதல் அவசியமாகும். தெளிவறிவின்றிற் மனமாற்றம் ஏற்படுதல் இயலாது.

பொல்லாப்பையே தனது இயல்பாகக் கொண்ட மனம் பாதுகாப்பை முன்னிட்டு நன்மையைச் சிருஷ்டிக்கிறது. ஏனெனின் அதன் பொல்லாப்பை நீக்கிவிட்டால் அதற்கு அதுவே மரணமாகும். மரணத்தைத் தவிர்த்துக் கொள்ள மனம் பாதுகாப்புடன் நீடித்திருக்கும் பொருட்டு, உள்ள பொல்லாப்பு அப்படியே இருக்க அதற்கு எதிரான நன்மையைச் சிருஷ்டிக்கிறது. நல்ல எண்ணங்களை விருத்தி செய்து தன்னுடைய நிலைப்பாட்டை உறுதி செய்து கொள்கிறது. அதனால் அதனுடைய பொல்லாப்பான இயல்பு மறைந்திருந்து செயற்படுவதைக் கவனித்து அறிகிறோம். மக்களூள் எவரும் முழுமையான பொல்லாப்புடையவர்களாகவோ அல்லது பூரணமான நன்மை உடையவர்களகவோ இருப்பதைக் காணோம். பொல்லாப்பும் நன்மையும் கூடியோ அல்லது குறைந்தோ மக்களிடம் இருப்பதைக் காணலாமேயன்றி இவை இரண்டும் சிறிதேனும் இல்லாதிருப்பவர்களைக் காணுதல் அரிதாகும்.

யோகசுவாமிகள் போன்ற மெய்ஞ்ஞானிகளும் சிவயோகச் சித்தர்களும் ஒரு பொல்லாப்பும் இல்லாது நன்மையே சொரூபமாக வாழ்ந்ததைப் படித்தும் கேட்டும் அறிகிறோம். அங்ஙனம் வாழ அவர்களால் எப்படி முடிந்தது? என்பது எமது ஆய்வுக்கும் தெளிவிக்கும் உரிய விடயமாகும். அவர்கள் மனச் சார்பு அற்ற நிலையில் மாசறு காட்சி மூலம் பெற்ற தனி நன்மைச் சொரூபமானது, மனதினால சிருஷ்டிக்கப்படும் பொல்லாப்புக்கு எதிரான நன்மை அல்ல என்பதை நாம் சரிவரத் தெளிந்து கொண்டு எமது ஆய்வைத் தொடர்ந்து செய்வோம். சைவ சித்தாந்தம் சிவனை நன்மையின் சொரூபமாக வர்ணிக்கிறது. அதை எதிர்மறையாகக் குறிப்பிடுவதாயின் ஒரு பொல்லாப்பும் இல்லாதவன் எனலாம். அவனுடைய நன்மை மனதினால் சிருஷ்டிக்கப் படுவதில்ல. மனதினால் சிருஷ்டிக்கப்படும் நன்மையானது பொல்லாப்புடன் பிரிக்கமுடியாதபடி கலந்துள்ளது. எனவே மனது படைத்த மனிதன் ஒரு பொல்லாப்பும் இல்லாது வாழ வேண்டுமாயின் நன்மை பொல்லாப்பு இரண்டையும் பூண்டோடு மூலவேர் அற முழுமையாக நீக்குதல் வேண்டும். இன்றேல் பரிபூரணமான நன்மையின் சொரூபத்தை நாம் அடைதல் என்றும் இயலாது.

பதஞ்சலி முனிவர் காட்டிய ராஜயோக வழியைப் பின்பற்றுபவர்கள் யோகப் பயிற்சி மூலம் மனத்தை அடக்க முயற்சிக்கின்றனர். மனதின் இயல்பு ஒடுங்குவதும் விரிவதும் அலாது அடங்குவது அல்ல. இதை உணர்ந்த தாயுமான சுவாமிகள் "சிந்தயை அடக்கியே சும்மா இருத்தல் அரிது" என உபதேசித்துள்ளார். யோகசுவாமிகள் நிசமாகவே சும்மா இருந்தும் வாழ்ந்தும் வந்ததை நாம் நேரிற் கண்டுள்ளோம். அவர் ராஜயோகப் பயிற்சியோ அல்லது அட்டமாசித்திகள் எதுவுமோ செய்ததாக நாம் காணவில்லை. அவர் செய்த ஒரே ஒரு உத்தம சாதனை மணிவாசகப் பெருமான் காட்டிய வழியில்,

நானேயோ தவஞ்செய்தேன்? சிவாயநம எனப்பெற்றேன்

தேனாயின் அமுதமாய்த் தித்திக்குஞ் சிவபெருமான்

தானேவந் தெனதுள்ளம் புகுந்தடியேற் கருள்செய்தான்

ஊனாரும் உயிர்வாழ்க்கை ஒறுத்தன்றே வெறுத்திடவே!


எனும்படி சிவசெப தியானமும் விசாரணையும் செய்தார். இச்சாதனையில் சரிவர ஈடுபடும் சாதகர் மனமாற்றம் பெறுவதைக் காணலாம். அந்த மாற்றம் எவ்விதமான மனச் சிந்தனையிலும் ஏற்படும் கருத்து மாற்றம் அல்ல. தலை அணை உறையை மாற்றம் செய்வதால் தலையிடி நீங்காததுபோலக் கருத்து மாற்றத்தால் ஒரு பொல்லாப்பும் இல்லாத தூய ஆத்மீகத் தெளிவு நிலை உருவாகப் போவதில்லை. மனதில் ஏற்படும் இருமைவகை நீங்கப் போவதில்லை. ஆயுத ஊடமாக உள்ள மனம், வேறு ஊடகமாக மாறப் போவதில்லை.

சிவோகம் பாவனையும் பஞ்சாட்சர செபதியானத்தையும் இடைவிடாது பத்தி சிரத்தையுடன் சிறிதேனும் வழுவாது உரிய முறையில் தொடர்ந்து செய்து வந்தால், ஆயுத ஊடகமாகச் செயல்படும் மனம்ம் அற்புதமான பாரிய பூரணமாற்றம் அடைகிறது. அது திருவருட் பாத்திர ஊடகமாக மாறுகிறது. ஆயுதமாகச் செயற்படும் நிலைமாறி அது திருவருளை முழுமையாக ஏற்கும் அமுதசுரபிப் பாத்திரமாக மாறுகிறது. அதற்காகச் சாதகர் எவரும் மனத்தை அடக்கவோ அல்லது ஒடுக்கவோ எவ்விதமான பிரயத்தனமும் எடுக்கவேண்டியதில்லை. நாம் எடுக்கும் அடக்குமுறைப் பிரயத்தனம் அனைத்தும் மனவிருத்தியின் செயற்பாடேயாகும். மனப் பிரயத்தனத்தால் மணிவாசகப் பெருமான் எவ்வித தவ முயற்சியிலும் ஈடுபடவில்லை என்பதை, அவர் "நானேயோ தவஞ் செய்தேன்? " என்னும் வினா மூலம் , இல்லை என விளக்குகின்றார். சிவசெப தியானம் மூலம் அவர் தன்னுடைய ஏவல் மனத்தைத் திருவருளுக்கு ஏற்ற மௌன பாத்திரமாக மாற்றிவிட்டார். அதே நெறியிற்றான் யோகசுவாமிகளும் திருவருளுக்குச் சும்மா இருந்து பாத்திரமானார். அவர் வேறு செயற்கை முறையில் மனதைக் கட்டுபடுத்தும் சாதனை எதுவும் செய்ததை நாம் காணவில்லை.

அவர் தனது மனதை மாற்றம் அடையச் செய்து திருவருட் பாத்திர ஊடகம் ஆக்கிய பின்பே சிறந்த ஆத்ம விசாரணையில் ஈடுபட்டார். நினைப்பற நினைக்கும் ஆற்றலைப் பெற்றார். ஒரு பொல்லாப்பும் இல்லாது ஜிவன் முக்த நிலையில் பூவுலகிலேயே வாழும் தெய்வீக வாய்ப்பைச் சரிவரப் பெற்றார். எழுத்தாளர் அவருடன் 35 வருட காலம் கொண்டிருந்த தொடர்பினால் இதை நிச்சயமாக எழுத முடிகிறது. அவரை வெறுமனே புற உலகில் பின் தொடர்ந்ததாலோ அல்லது அவரைப் புறப்பூசை செய்து செயற்கையாக வழிபட்டதனாலோ இந்த உண்மை விளக்கம் ஏற்படவில்லை. அவர் காட்டிய உத்தம நெறியில் மனதைத் திருவருளுக்குப் பாத்திரமாக்கிய பேறாகவே இதை அச்சமின்றித் தெளிவாக எழுத முடிகிறது. ஒரு பொல்லாபும் இல்லாது பூரணமான தெய்வீக வாழ்க்கை வாழ விரும்பும் சாதகர்கள் யோகசுவாமிகள் காட்டிய நெறியில் எப்பவோ முடிந்த காரியம், நாம் அறியோம் என்னும் மகாவாக்கியங்களை அவதானத்துடனும் விழிப்புணர்வுடனும் பத்தி சிரத்தையுடன் தெளிந்து அப்பியாசித்து வந்தால் நிச்சயமாக ஒரு பொல்லாப்பும் இல்லாது மன அருள் நிறைவு பெற்று வாழலாம்.

மக்கள் மனச் சார்புக்கு அடிமைபட்டுச் செயலாற்றும் வரைக்கும், எவ்வளவு போலி நன்மைகளைச் செய்தபோதும் பொல்லாப்பு நீடிக்கத்தான் செய்யும். சில மத போதகர்களும் அடியார்களும் உலகில் நடைபெறும் காரியங்கள் யாவும் நன்மைக்கே என உரைக்கின்றனர். ஒரு பொல்லாப்பும் இல்லை என்பதின் பொருளை "எல்லாம் நன்மைக்கே" என விளக்கிக்கூறுகின்றனர். இன்னும் சிலர் உலகைப் பொல்லாதது என்றும் நல்லதென்றும் பலவாறு வர்ணிப்பார். உலகம் பொல்லாததோ நல்லதோ நாம் அறியோம். அதிற் காணப்படும் நன்மை தீமை யாவும் அதைக் காண்பவருடைய மனச்சார்பு நிலையிலேதான் தங்கி உள்ளதென்பது நன்கு புலப்படுகிறது. உலகம் நன்மை தீமைகளை உருவாக்குவதாகத் தெரியவில்லை. மூவாயிரம் ஆண்டுகளுக்கும் முன்பு வாழ்ந்த தமிழ சங்க காலச் சான்றோர்கள் இவ்வுண்மையை வழுவற உணர்ந்து "தீது நன்றும் பிறர்தர வாரா! நோதலும் தணிதலும் அவற்றோர் அன்ன!" எனத் தெளிந்து அறநெறி வாழ்ந்தனர். ஒரு பொல்லாப்பும் இல்லாது வாழ்ந்தனர். இத்தகையதொரு சமநோக்கு ஏற்பட வேண்டுமாயின் மனமாற்றம் மிகவும் அவசியமாகும்.

அறநெறியை மன இயக்கத்தின் இருமை வகைதெளிதல் என்றும், மனத்தின் கண் மாசிலாது வாழ்தல் என்றும் வள்ளுவப் பெருந்தகை விளக்கம் கூறுகிறார். மனத்தால் ஆக்கப்படும் வல்வினையே இருமை வகை உடையதாகும். இதைச் சிறப்பாக விளக்கும் திருமந்திரம் இதோ:--

மனவாக்குக் காயத்தால் வல்வினை மூளும்

மனவாக்கு நேர்நிற்கில் வல்வினை மன்னா!

மனவாக்குக் கெட்டவர் வாதனை தன்னால்

தனைமாற்றி ஆற்றத் தகுஞானி தானே!


எம்மிடம் வல்வினை மூளுவதற்குக் காரணம் மனச் செயற்பாடாகும். வல்வினை என்பது இருவகையான தீவினையும் நல்வினையும் ஒருங்கு சேர்ந்ததாகும். மனவாக்கு நேர் நிற்றல் என்பது இருவினை ஒப்பாகும். இருவினை ஒப்புநிலை அடைய விரும்பும் சாதகர்கள் நன்மை தீமை இரண்டையும் சமமாக நோக்குதல் வேண்டும். அதற்கு அனுசரணையாகத் தன்னையே மாற்றும் ஆற்றல் பெறுதல் வேண்டும். அதாவது ஆயுத ஊடகமாக உள்ள மனதைத் திருவருளுக்கு முழுமையான பாத்திர ஊடகமாக மாற்றுதல் வேண்டும்.

இதைப்பற்றி மேலும் அற்புதமான சிறந்த விளக்கம் கொடுக்கும் இன்னொரு திருமந்திரப்பாடலை இங்கு தருகிறோம்:

அறிவறி யாமை இரண்டும் அகற்றி

செறிவறி வாய்எங்கும் நின்ற சிவனைப்

பிறிவறி யாது பிரானென்று பேணுங்

குறியறி யாதவர் கொள்ளறி யாரே!


நல்வினையானது சுட்டறிவினாலும் தீவினை அறியாமையினாலும் நிகழ்வனவாகும். இருவினையை அகற்ற வேண்டுமாயின் அறிவு அறியாமை ஆகிய இரண்டைஅயும் அறவே நீக்குதல் வேண்டும். அதன்பொருட்டு முழுமையான மாற்றம் ஏற்படுதல் அவசியமாகும். அதற்குரிய உத்தம சாதனை பிறிவு அறியாது பரம்பொருளைப் பிரானெனப் பேணிப் போற்றி வழிபடுதலாகும். பிறிவு அறியாது வழிபடுதல் சிவோகம்பாவனை ஆகும். பிறிவு அறியாமை அத்துவதத்தைக் குறிக்கும் சோக மந்திர செப தியானத்தை விளக்குவதாகும். அதன் குறிக்கோளை அறியாதவர் ஒரு பொல்லாப்பும் இல்லாத வாழ்வைப் பெற அறியமாட்டார். சிவனுடைய திருவருளைப் பூரணமாக பெறுவதற்குத் தகுதி வாய்ந்தவர் அறிவு அறியாமை இரண்டையும் அகற்றும் ஆற்றல் பெற்றவராவர். இருமவகை அகற்றவேண்டும் என்ற குறிக்கோளைத் தெளிந்து அனுட்டிக்காதவர் ஒரு பொல்லாப்பும் இல்லாது வாழ்தல் அரிதாகும்.

அறியாமையில் உள்ள மக்கள் அநேகமாக அதை நீக்கும் பொருட்டு அறிவை சம்பாதிக்கின்றனர். அறிவுச் சம்பாத்தியம் அறியாமை முழுமையாக நீக்குவதால் புலப்படவில்லை. அதேபோலப் பொல்லாப்பை அகற்றுவதற்காக மனச் சார்பு நன்மையைச் செய்கின்றனர். அத்தகைய நன்மைச் செயல்கள் அவர்களிடமுள்ள தீமையை அரீவே நீக்குவதாக புலப்படவில்லை. அறிவும் நன்மையும் உள்ளவர்களிடம் அறியாமையும் பொல்லாப்பும் மறைந்திருப்பதைக் காணக் கூடியதாக உள்ளது. அறிவு அறியாமை இரண்டும் நீங்கிய மெய்ஞானிகளிடம்தான் ஒரு பொல்லாப்பும் இருப்பதில்லை. இதை உணர்ந்து மனமாற்றம் செய்வதற்கு வேண்டிய சாதனைகள் செய்து ஒரு பொல்லாப்பும் இல்லாது வாழ்வோமாக! இதுவே எமது பிரார்த்தனையாகும்.

மேற்குறித்த திருமந்திரத்தில் வரும் "செறிவறிவு" என்னும் பதம் எமது ஆய்வுக்குரியதாகும். செறிவறிவைப் பேரறிவெனக் குறிப்பிடுதல் தமிழ் மரபாகும். இதை இன்னொரு வகையில் சைவ சித்தாந்திகள் சிதாகாசம், சிதம்பரம், தில்லை அம்பலம் எனப்பலவாறு கூறுவர். இவற்றிலிருந்து நாம் கிரகித்து உணரக் கூடியது யாதெனின் செறிவறிவானது வியாபகமாக எல்லோருக்கும் பொதுவாக உள்ளதென்பதாகும். சிவன் செறிவறிவாகச் சிதாகாசத்தில் வியாபித்து விளங்குகிறான். மனிதன் சுட்டறிவாக மூளையில் கட்டுபட்டு விளங்குகிறான். இவ்விடத்தில் நாம் சுட்டறிவுக்கும் செறிவறிவுக்கும் உள்ள வேறுபாட்டையும் அவை எப்படிப் பெறப்படுகின்றன என்பதைப் பற்றியும் தெளிந்து கொள்ளுதல் அவசியமாகும்.

சுட்டறிவை நாம் நன்கு அறிவோம். எதையும் சுட்டிப் பெயரிட்டு அறிவதே சுட்டறிவாகும். அது மன மெய் மொழி எனப்படும் முன்று கருவிகளாலும், அத்துவா எனப்படும் எழுத்து சொல் சொற்றொடர் வாக்கியம் கலை தத்துவம் ஆகிய ஆறு வாயில்களாலும் சம்பாதிக்கப்பட்டு எமது மூளையில் பதித்து வைக்கப்படுள்ளதாகும். அதைப் பிறருடன் பகிர்ந்து கொள்ளலாம், கொடுக்கலாம் வாங்கலாம் எனினும் அது ஒரு தனி உடைமையாகும். ஒருவருக்குச் சொந்தமான அறிவு பிறரிடம் அதே மாதிரிக் காணப்படுவதில்லை. செறிவறிவானது ஒரு தனி உடைமை அன்று. அதை அத்துவாக்கள் வாயிலாகச் சம்பாதித்து மூளையில் எவராலும் பதிந்து வைத்தல் இயலாது. அதை மக்கள் பகிர்ந்து கொள்ளவோ கொடுக்கல் வாங்கல் செய்யவோ இயலாது. நவீன கல்வியாளர் அதை--- Creative Intelligence -- விவேகப் படைப்பு சக்தி எனக் கூறுகிறார்கள். சுட்டறிவு இருமைவகை உடையதாவும், செறிவறிவு ஒருமைப்பாடு உடையதாகவும் உள்ளன.

சிதாகாசமாகிய செறிவறிவு வியாபித்துள்ள இடத்தைத் திருமூலரும் அருணகிரி நாதரும் மிகவும் அழகாக இராப்பகல் அற்ற இடம் என வர்ணித்திருக்கின்றனர். பூமியைச் சார்ந்துள்ளவர்களுக்கு இரவும் பகலும் உண்டாவது போல, மனத்தைச் சார்ந்துள்ளவர்களுக்கு அறியாமையும் அறிவும் மாறி மாறி வரும். அது சுட்டறிவு ஆகும். பூமியின் சார்பைவிட்டு நீங்கித் திசைவெளியில் விண் கலத்தில் சஞ்சரிக்கும் ஒரு விஞ்ஞானிக்கு இரவு பகல் என்ற வேறுபாடு ஏற்படுவதில்லை. அதேபோல மனத்தின் சார்பை விட்டு நீங்கி அருள்நிலையில் நிட்டை கொண்டு வாழும் ஒரு மெய்ஞ்ஞானிக்கு அறிவு அறியாமை உண்டாவதில்லை. அவன் பாபபுண்ணியம் செய்வதில்லை. நரக சுவர்க்க துன்ப இன்பம் அனுபவிப்பதில்லை. அத்தகையதொரு பூரணமான அருள்நிலை அடைதல் வேண்டுமாயின் நாம் இராப்பகல் அற்ற இடத்தே அறிதுயில் கொள்ளும் சாதனையில் சித்தி அடைதல் வேண்டும். தியான சாதனையைத் தனித்தமிழில் அறிதுயில் எனக் கூறுவர். இராப்பகல் அற்ற இடத்தைப் பற்றிக் கூறும் திருமந்திரப் பாடலைப் பயின்றுப் பாருங்கள்:

இராப்பகல் அற்ற இடத்தே இருந்து

பராக்கற ஆனந்தத் தேறல் பருகி

இராப்பகல் அற்ற இறையடி இன்பத்

திராப்பகல் மாயை இரண்டிடத் தேனே!


இதில் வரும் இரவு பகலின் மறைபொருள் அறியாமையும் அறிவுமாகும். அதை இருளும் மருளும் எனக் கூறுதல் சித்தாந்த மரபாகும். சிதாகாசத்தில் திருநடம் புரியும் தில்லை நடராஜனை அவை சிறிதும் பாதிப்பதில்லை. பூமியை -- அதாவது மாயைச் சார்ந்து வாழும் சீவனையே-- அவை வெகுவாகப் பாதிக்கும். அதனாலேயே இறைவனுடைய ஆனந்தத் தேன்பருக இயலாது பொல்லாப்பில் வருந்துகின்றனர். இந்நிலையிலிருந்து நாம் விடுதலை பெறுதல் வேண்டின் எமது உலக பந்த பாசப் பராக்கு அறுதல் வேண்டும். திருமந்திர இலக்கியத்துக்கு அருமையான இலக்கணமாகப் பராக்கற வாழ்ந்து எமக்கு வழிகாட்டிய ஒப்பிலாப் பெருமை யோகசுவாமிகளுக்கு உண்டு.

நாம் இராப்பகல் அற்ற இடத்தே இருந்து அறிதுயில் கொள்ளும் சாதனை செய்தல் எப்படிக் கைகூடும்? என்பது ஆத்மீகப் பிரச்சினையாக உள்ளது. இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு இந்து மதம் நாங்கு நெறிமுறைகளை அமைத்துக் காட்டியுள்ளது. அவற்றை வேதாந்திகள் கேட்டல் சிந்தித்தல் தெளிதல் சமாதிகூடல் எனவும், சித்தாந்திகள் சரியை கிரியை யோகம் ஞானம் எனவும் ; வைஷணவர்கள் பத்தியோகம் கர்மயோகம் இராஜயோகம் ஞானயோகம் எனவும் பகுத்துக் கூறுவர். அவற்றுள் வேறுபாடு கற்பித்து நம் முரண்பட வேண்டியதில்லை. அவரவர் பக்குவநிலைக் கேற்பச் சாதகர்கள் படிப்படியாக அனுட்டித்தலே சிறந்ததாகும். இச்சாதனாநெறிகள் யாவும் ஆத்ம சுத்தியின் பொருட்டே ஆக்கப்பட்டனவாகும். இவற்றைப் பலன் கருதாது மனச்சார்பற்ற நிலையில் அனுசரித்தலே சாலச் சிறந்ததாகும்.

இச்சாதனைகள் அனைத்தும் மனதைத் திருவருளுக்கு உகந்த பாத்திரமாக மாற்றி அமைத்தலையே இலட்சியமாகக் கொண்டுள்ளனவாகும். மனதைத் திருவருட் பாத்திரமாக மாற்ற வேண்டுமானால், அதில் விருத்தியாகிப் பதிவு செய்யபப்ட்ட சகல எண்ணங்களையும் காலிசெய்தல் அவசியமாகும். ஏனெனில் எண்ணங்களால் நிரப்பப்பட்ட மனதில் திருவருள் குடிகொள்வதற்கு இடமில்லை என்பதாகும். தண்ணீர் நிறைந்த பாத்திரத்தில் காற்றை நிரப்புதல் வேண்டுமாயின், அதிலுள்ளா நீரைக் காலிசெய்தால் போதும். காற்றை நிரப்புவதற்குப் பிரயத்தனம் எடுத்தல் பேதமை யாகும். ஆதேபோல நாம் மனதைக் காலி செய்யும் சாதனை செய்தாற் போதும். திருவருளை வரவழைக்க எந்த ஒருபூசை புனஸ்காரமும் செய்ய வேண்டியதில்லை. யோகசுவாமிகள் மனதைக்காலி செய்து மௌனநிலையில் சும்மா இருக்கும் சாதனை செய்வதிலேயே அல்லும் பகலும் ஈடுபட்டு வெற்றிக்கண்டார். அதன்பேறாகவே நாங்கு மகாவாக்கியங்களையும் எமக்கு அருளி உதவினார்.

சூக்கும பஞ்சாட்சர செபதியானம் மூலம், நாம் அவரைப் போல எமது மனதைக் காலிசெய்ய்யும் சாதனை புரிவோம். அப்பொழுது காலியான மனதில் திருள் சுயமாகவே நிரையும். நிரையவே ஒரு பொல்லாப்பும் இல்லாது நாம் வாழ்தல் நிச்சயாமாகும்.

மூன்றாம் மகாவாக்கியம் முற்றும்

அணிந்துரை
எப்பவோ முடிந்த காரியம்
நாம் அறியோம்
ஒரு பொல்லாப்பும் இல்லை
முழுதும் உண்மை

Home Page Arumuga Navalar's home page Yogaswami's Page
Return to Top